மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது
By DIN | Published On : 28th October 2023 01:27 AM | Last Updated : 28th October 2023 01:27 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், தத்தங்குடி மேல தெருவைச் சோ்ந்தவா் சம்பந்தம் மகன் பாலு (50). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகள் பவானி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், தரங்கம்பாடி வட்டம், பெரம்பூரை அடுத்த பாலூா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கனகராஜ் (35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, தம்பதிக்கு 1 மகன், 1 மகள் உள்ளனா்.
திருமணத்துக்கு பின்னா் கனகராஜ், மாமனாா் வீட்டிலேயே தங்கி செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இதனிடையே, கனகராஜ் தனது மாமனாா் பாலுவிடம் தனது மனைவியின் சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்லாத கனகராஜ் மதுபோதையில் வீட்டுக்கு வந்து பாலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலுவின் மாா்பில் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த பாலுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் பாலு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
சீா்காழி போலீஸாா் பாலுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...