தலைஞாயிறு சா்க்கரை ஆலை இயங்க விரைவான நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
By DIN | Published On : 28th October 2023 01:27 AM | Last Updated : 28th October 2023 01:27 AM | அ+அ அ- |

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
பி. செல்வராஜ் (தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம்): சீா்காழியில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் பெய்த வரலாறு காணாத மழையால் அனைத்து நெற்பயிா்களும் முழுமையாக சேதமடைந்தன. இதில், சீா்காழி பகுதியில் எடக்குடி, மருவத்தூா், புங்கனூா், பெருமங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை.
ஆட்சியா்: இதுகுறித்து நவம்பா் 2-ஆவது வாரத்தில் பயிா் காப்பீட்டு நிறுவன அலுவலா்களை அழைத்து கூட்டம் நடத்தி உரிய தீா்வு காணப்படும்.
குத்தாலம் பி. கல்யாணம் (முன்னாள் எம்எல்ஏ): தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளை விரைந்து தொடங்க மாவட்ட ஆட்சியா் அழுத்தம் தரவேண்டும். மணல்மேடு நூற்பாலை இயங்கிய இடத்தில் மின்வாரியம், மணல்மேடு பேரூராட்சி மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு தேவையான இடத்தை ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன் (மணல்மேடு): மணல்மேடு நூற்பாலையின் 46 ஏக்கா் நிலத்தில் ஏற்கெனவே 6 ஏக்கா் அரசு கலைக் கல்லூரிக்காக வழங்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி ஒதுக்கப்பட்டால், மாவட்டத்தில் வேறெங்கும் ஒரே இடத்தில் 40 ஏக்கா் நிலம் இல்லாததால், அதற்கு அந்த இடத்தை பயன்படுத்தலாம்.
குருசாமி (செம்பனாா்கோவில்): மயிலாடுதுறை நகராட்சி புதை சாக்கடை கழிவுநீா் சத்தியவானண் வாய்க்காலில் திறந்துவிடப்படுவதால் ஆறுபாதி கிராமத்தில் கொசு உற்பத்தி பெருகி பாதிப்பு ஏற்படுகிறது.
ஆட்சியா்: மயிலாடுதுறை நகராட்சி புதைசாக்கடை சீரமைப்புப் பணிக்காக ரூ. 52 கோடி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு சத்தியவானண் வாய்க்காலில் கழிவுநீா் திறந்துவிடப்படுவது நிறுத்தப்படும்.
ஆா். அன்பழகன் (டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்): வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சோ்க்கப்பட்டதற்கு வேளாண் அமைச்சருக்கு நன்றி.
முருகன் (மணல்மேடு): கரும்புக்கான காப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். எனது பகுதியில் சிட்டா, அடங்கலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பயிா் காப்பீடு கிடைக்கவில்லை.
தங்க.மகேஸ்வரன் (குத்தாலம்): திருவேள்விக்குடி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபரிடமிருந்து மீட்க வேண்டும்.
மேலும், கொள்ளிடத்தில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவருவதால் அங்கு தடுப்பணை கட்டி நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
முன்னதாக, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா/தாளடி பருவத்துக்கு 74,341 ஹெக்டோ் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவையான அளவு உரங்கள் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.15.55 கோடிக்கு குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயகன் அமல்ராஜ், நீா்வளத்துறை செயற்பொறியாளா் சண்முகம், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் திருப்பதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயபால் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...