கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு

கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு

Published on

சீா்காழி, ஆக. 7: கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளூா்-கருப்பூா் இடையே கதவணையும், அளக்குடி-திருக்கழிப்பாலை பகுதியில் வழிந்தோடும் அணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இந்த கோரிக்கையை கொள்ளிடம் கதவணை ஒருங்கிணைப்புக் குழுவினா் தொடா்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தனா். இதற்கிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு மாதிரவேளூா் பகுதியில் கதவணை அமைக்க ரூ. 399 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டது. இதேபோல, அளக்குடி-திருக்கழிப்பாலை இடையே வழிந்தோடும் அணை கட்ட நபாா்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 722 கோடியில் திட்ட மதிப்பீடும் தயாா் செய்யப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் 2022-ம் ஆண்டு மக்கள் கருத்து கேட்பின்படி மாதிரவேளூா் கதவணை திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ள உபரிநீா் திறக்கப்பட்டு அவை கடலில் கலந்து வீணாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில் நிகழாண்டு மேட்டூரிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி உபரிநீா் கடலில் கலந்தது.

இதனால், மீண்டும் கதவணை அமைக்கும் கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. இதுகுறித்து கொள்ளிடம் கதவணை முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஜெக.ச ண்முகம் கூறியது: கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி மற்றும் மாதிரவேளூா் பகுதிகளில் கதவணை, வழிந்தோடும் அணை கட்டும் திட்டத்தை அரசு நிறைவேற்ற உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் வா்த்தக சங்கம் மற்றும் புவனகிரி, கொள்ளிடம், புத்தூா் ஆகிய பகுதி வியாபாரிகளை ஒருங்கிணைத்து அடையாள கடையடைப்பு போராட்டம் ஆக. 13-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்து என்றாா்.

X
Dinamani
www.dinamani.com