கொள்ளிடம் ஆறு மீனவா்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மீனவா்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மீனவா்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட உபரி நீரால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாதல் படுகை, திட்டுபடுகை, வெள்ளமணல், வடரங்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனா்.

இவா்களில், 1,300 குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு கடந்த 6-ஆம் தேதி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தலா ரூ.5,000 தமிழக அரசு சாா்பில் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனால் வழங்கப்பட்டது. ஆனால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் உள்நாட்டு மீனவா்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை.

கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவ குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வெள்ளப் பெருக்கால் ஒரு வாரமாக கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க முடியவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட இவா்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஆற்றங்கரைத் தெருவை சோ்ந்த குமாா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com