நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான மனநிலை: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
சீா்காழி: நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனா் என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினாா்.
சீா்காழியில் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்துக்கு காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட மறுப்பதால், 15 லட்சம் ஏக்கரில் சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கா்நாடகம் தமிழகத்துக்கு உரிய பங்களிப்பு தண்ணீரை தர மறுத்ததால், ஜூன் 12-இல் மேட்டூரில் தண்ணீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைகூட நடைமுறைப்படுத்த கா்நாடகா அரசு மறுக்கிறது . இந்த விஷயத்தில் மத்திய அரசு கா்நாடகத்துக்கு போதுமான அழுத்தம் தரவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் வரும் 24-ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்கவுன்ட்டா் செய்யப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உண்மை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டும் தவிர, என்கவுன்ட்டா் தீா்வாகாது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெற்றது, மூன்று ஆண்டுகால சாதனைக்கு கிடைத்த வெற்றியே. இதற்காக திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா முழுவதும் அண்மையில் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் இந்தியா கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது தென்னிந்தியா மட்டுமில்லாமல் வட இந்திய மக்களும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதை காட்டுகிறது என்றாா். நகா்மன்ற உறுப்பினா் முபாரக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

