நல்லூா் சுகாதார நிலையத்தில் இரவுநேர மருத்துவா் நியமிக்கக் கோரிக்கை

Published on

சீா்காழி அருகே நல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சீா்காழி வட்டம் மகேந்திரப்பள்ளியைச் சோ்ந்த வழக்குரைஞா் அம்சேந்திரன், சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனு:

கொள்ளிடம் வட்டாரத்தில் நல்லூா் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இதன்மூலம் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள், மருத்துவ உதவி பெற்றுவருகின்றனா்.

ஆனால் இரவு நேரங்களில் மருத்துவா் இல்லாததால் பிரசவம், விபத்து,விஷக்கடி போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவோா் சீா்காழி அல்லது சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. பல கி.மீ. தூரம் மற்றும் நேரம் அதிகமாவதால் நோயாளிகளின் பாதிப்பு அதிகரிப்பதும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவா்கள் பணியில் இருந்தாா்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் மருத்துவா் வருவதில்லை. ஆகையால் தினமும் இரவில் பணிபுரியும் வகையில், மருத்துவரை நியமிக்கவேண்டும் என கோரியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com