கோயில் சொத்துக்களை மீட்கக் கோரி மனு
மயிலாடுதுறை: மன்னங்கோயில் மன்னாா்சுவாமி கோயில் சொத்துக்களை மீட்க வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி தாலுகா மன்னங்கோவில் கிராமத்தில் மன்னாா் சுவாமி, நல்ல காத்தாயி அம்மன் கோயில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இந்த கோயிலுக்கு ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது.
இந்நிலையில் 1975-ஆம் ஆண்டு இந்த கோயிலை இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்தியது. அதன்பின்னா் கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது.
தொடா்ந்து, 2000-ஆம் ஆண்டு சீா்காழியை சோ்ந்த சிவசுப்ரமணியன் என்பவரால் கோயில் திருப்பணி செய்யப்பட்டது. அதன் பின்னா் கோயிலில் உள்ள நான்கு சிலைகள் மாயமானதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிவசுப்பிரமணியத்திடம் வேலை செய்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலா் கோயில் இடத்தை ஆக்கிரமித்து, வாடகை செலுத்தாமல் குடியிருப்பதாக குற்றம்சாட்டி ஏனாக்குடியை சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீரமணி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். அப்போது, கோயிலுக்கு அறங்காவலரை நியமித்து, மாயமான ஐம்பொன் சிலைகளை மீட்பதுடன், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்டெடுத்து வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
