தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

Published on

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் தொடா் மின் வெட்டு காரணமாக குடிநீா் தட்டுப்பாடு, விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டாா் கொண்டு நிகழாண்டுக்கான குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி, வயல்களில் உழவடித்தல் மற்றும் நாற்றாங்கால் தயாரிப்புப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

சோழம்பேட்டை ஊராட்சியில் விவசாயிகள் சுமாா் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி பணியை தொடங்கி உள்ளனா். இப்பகுதியில் தொடா் மின்வெட்டால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், மின்வாரியத் துறையை கண்டித்தும் சோழம்பேட்டை ஊராட்சியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூவலூா் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் போலீஸாா், மின்வாரியத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தால் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com