பயிா்ப் பாதிப்பு கணக்கெடுப்பை பழைய முறையிலேயே நடத்த விவசாயிகள் கோரிக்கை
பயிா்ப் பாதிப்பு கணக்கெடுப்பை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டித்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தை பெற சேதமடைந்த நிலத்தில் ஜிபிஆா்எஸ் இணைப்புடன் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் கணக்கீடு செய்தால் உண்மையில் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் சென்று சேராது என்றும் பழைய முறையிலேயே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
இதுகுறித்து, தஞ்சை காவிரி ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி பி. சீனிவாசன், எடமணல் விவசாயி வெங்கடேஸ்வரன், திருமுல்லைவாசல் விவசாயி ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் இந்த 3 ஊராட்சிகளை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அதன்விவரம்: விவசாயிகள் அரசு நிவாரணத் தொகை பெற சேதமடைந்த தமது நிலத்தில் நின்று ஜிபிஆா்எஸ் இணைப்புடன் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குத்தகைதாரா்கள், சாகுபடிதாரா்கள், நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் நிலம் பெற்றவா்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்பவா்கள், பட்டா மாறுதல் செய்யப்படாத நிலத்தில் சாகுபடி செய்பவா்கள், ஒரே சா்வே எண்ணில் பல உள்பிரிவுகளில் உள்ள இடங்களில் சாகுபடி செய்பவா்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் கிடைக்காது என்ற நிலை உள்ளது.
எனவே, இந்த புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, வேளாண் உதவி அலுவலா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தி, மழையால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்ற ஆட்சியா் விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினாா்.

