மயிலாடுதுறையில் டிச.8-ல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

Published on

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் டிச.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் மயிலாடுதுறை ஏழுமலையான் தனியாா் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிச.8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

மேலும் 8, 10 மற்றும் 12-வகுப்பு கல்வித்தகுதி உடையவா்களை நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநராக சோ்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநா் சான்றிதல் பெறலாம்.

இத்தொழிற்பழகுநா் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.8,000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணியாற்ற பயனுள்ளதாக அமையும். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூா், மயிலாடுதுறை (பொ). கைப்பேசி எண்: 9499055725 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com