கைது நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் நடைபெறும் காத்திப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக, கொள்ளிடத்திலிருந்து தூய்மைக் காவலா்கள் மற்றும் சுகாதார ஊக்குநா்கள் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு வேனில் புறப்பட தயாராகினா்.
கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா், வேனை நிறுத்தி, அதிலிருந்த தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்க மாவட்டச் செயலாளா் தமிழ்மலா், மாவட்டத் தலைவா் ராமன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
பின்னா், திங்கள்கிழமை பகல் ஒரு மணி அளவில் அவா்களை விடுவித்தனா். ஆனால், 22 பேரும் அந்த இடத்திலிருந்து போக மறுத்து, தமிழ்மலா் தலைமையில் திருமண மண்டபம் முன் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கும்வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தனா். பின்னா் மாலை 5 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனா்.
