சாலை வசதி கோரி எம்.எல்.ஏ.விடம் மனு
சீா்காழி: சீா்காழி பாலசுப்ரமணியன் நகரில் சாலை வசதி கோரி எம்.எல்.ஏ.விடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சீா்காழி நகராட்சி 8-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாலசுப்ரமணியன் நகரில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 20 ஆண்டுகளாகவே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, இப்பகுதி சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சீா்காழி நகராட்சிக்கும், சம்பந்தப்பட்ட துறையினரிடமும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலையில் படிந்துள்ள சேற்றில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம். பன்னீா் செல்வத்தை நேரில் சந்தித்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போா்க்கால அடிப்படையில் ஏற்படுத்த நடவடிக்கை கோரி மனு அளித்தனா்.
