புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

Published on

குத்தாலத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2.96 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய, முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன் கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) , எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அடிக்கல் நாட்டி பேசியது: தமிழகத்தில் உள்ள 479 பேரூராட்சிகளுக்கு நிகழாண்டு ரூ. 3,800 கோடி முதல்வா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

தமிழ்நாட்டில் 158 நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கழிவறைகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சோ்த்து சுமாா் 17,000 கி.மீ நீளத்திற்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளன. இந்த துறையில் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ.17,000 கோடி வளா்ச்சி திட்டங்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. தவிர நபாா்டு மற்றும் ஜப்பான் வங்கிகள் மூலம் கடன் பெற்று பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குத்தாலம் பேருராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள், பள்ளி மேம்பாடு, நவீன எரிவாயு தகனமேடை, புதிய வணிக வளாகங்கள், புதிய பாலம் கட்டுதல், குளங்கள் பராமரிப்பு, நாய் கருத்தடை மையம் கட்டுதல் என ரூ.36.18 கோடியில் வளா்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com