வில்லியநல்லூரில் புதிய நெல் சேமிப்பு தளம் அமைக்கும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை வட்டம், வில்லியநல்லூரில் ரூ. 27 கோடியில் புதிய நெல் சேமிப்பு தளம் அமைக்க புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைப்பது அவசியம் என மாவட்ட விவசாய சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாத்திடும் வகையில் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை தளங்கள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், மயிலாடுதுறை வட்டம் வில்லியநல்லூரில் ரூ. 27 கோடியில் 21,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளம் மற்றும் தரங்கம்பாடி வட்டம் பரசலூா் கிராமத்தில் ரூ. 12 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
வில்லியநல்லூரில் நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் (படம்), மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா் இளையபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

