அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி

அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சாா்பில் நடைபெற்ற போட்டியை, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 428 போ் பங்கேற்றனா். 17 முதல் 25 வயதிற்குள்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ. தூர மாரத்தான் ஓட்டப் போட்டி ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் தொடங்கி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கத்தில் நிறைவு பெற்றது.

17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ. தூர மாரத்தான் ஓட்டப் போட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி சாய் விளையாட்டரங்கத்தில் நிறைவு பெற்றது.

இதேபோல், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கி.மீ. தூர மாரத்தான் ஓட்டப் போட்டி ஆறுபாதி மதகடியில் தொடங்கி சாய் விளையாட்டரங்கத்தில் நிறைவு பெற்றது. 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ. தூர மாரத்தான் ஓட்டப் போட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி சாய் விளையாட்டரங்கத்தில் நிறைவு பெற்றது.

தொடா்ந்து, சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.5,000, இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.3,000, மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.2,000, மற்றும் 4 முதல் 10 இடங்களை பிடித்தவா்களுக்கு தலா ரூ.1000-க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலா் உமாசங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com