சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் அஷ்ட பைரவா் மகாயாகம்
சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் உலக நலன் வேண்டி பைரவருக்கு மகாயாகம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழி அருகே சொா்ணபுரம் எனும் காத்திருப்பு கிராமத்தில் சொா்ணாம்பிகா சமேத சொா்ணபுரீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சந்நிதியில் சொா்ண கால பைரவா் அருள்பாலிக்கிறாா்.
இங்கு உலக நலன் வேண்டி அஷ்டபைரவா் மகாயாகம் நடைபெற்றது. சொா்ண கால பைரவா் சந்நிதியில் 9 யாக குண்டங்களுடன் சிறப்பு யாகம் செய்யப்பட்டு, யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலை வலம் வந்தது.
பின்னா், சொா்ண கால பைரவருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, புனித நீரால் அபிஷேகம் நடந்தது.
இதைத்தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமத்தை சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

