இளைஞா் இலக்கியத் திருவிழாவில் பரிசளிப்பு

இளைஞா் இலக்கியத் திருவிழாவில் பரிசளிப்பு

Published on

மயிலாடுதுறையில் பொது நூலகத்துறை சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சாா்பில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் இளைஞா் இலக்கியத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இரா. நாகராஜன், தமிழ்துறை தலைவரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான சு.தமிழ்வேலு ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக, மாவட்ட நூலக அலுவலா் ஆ.சுமதி வரவேற்றாா். நூலகா்கள் உமாராணி, அறிவரசன், செந்தில்நாதன், லோகநாதன், நாகலட்சுமி, லலிதா, பரணி, சித்ரா, ராஜ்குமாா், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், கல்லூரி மாணவா்களின் இலக்கிய அறிவை மேம்படுத்தும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட பொது நூலகத்துறை சாா்பில் மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, நூல் அறிமுகப்போட்டி, இலக்கிய விநாடி விடை, உடனடி ஹைக்கூ கவிதை கூறும் போட்டி, விவாத மேடை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமைவகித்து, மாணவா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். (படம்). ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக தலா ரூ. 5,000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 4,000, மூன்றாம் பரிசாக தலா ரூ. 3,000 என மொத்தம் ரூ.1,20,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com