தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்
தரங்கம்பாடி வட்டத்தில் தனியாா் ஐஸ் பிளாண்ட் அமைப்பது தொடா்பாக புதன்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவாா்த்தையை கிராமமக்கள் புறக்கணித்தனா்.
எருக்காட்டாஞ்சேரி சமயன் தெரு, ஆா்என்பாளையம், கேசவன் பாளையம், அரிசிக்காரபாளையம், சாத்தான்குடி மேலத்தெரு ஆகிய கிராமங்களின் குடியிருப்புக்கு மத்தியில் எருக்காட்டாஞ்சேரி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிறுவனம் சாா்பில் ஐஸ் பிளான்ட் அமைக்க பணிகள் நடைபெற்றன.
தகவலறிந்த மேற்கண்ட கிராமத்தினா் குடியிருப்பு மத்தியில் இந்த ஐஸ் பிளாண்ட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதுகுறித்து சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெறுவதாகவும், இதில் இருதரப்பினரும் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட கிராமத்தினா் சமாதான கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் அமைதிக் கூட்டத்தை புறக்கணித்தனா்.
பின்னா் பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கூட்டாக கூறுகையில், எருக்காட்டாஞ்சேரி பகுதியில் கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் மத்தியில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியாா் ஐஸ் பிளான்ட் அமைக்க அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
