பொதுப்பணி காவலா் பணி தோ்வுக்கு டிச.29-ல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பொதுப்பணி காவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் இளைஞா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.29-ஆம் தேதி விழிப்புணா்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணியாளா் தோ்வாணையம் (எஸ்.எஸ்.சி) பொதுப்பணி காவலா் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பி.எஸ்.எஃப். (எல்லை பாதுகாப்புப் படை) - 616, சி.ஐ.எஸ்.எஃப். (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) - 14595, ஐ.டி.பி.பி. (இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்) - 1293, எஸ்.எஸ்.பி. (சாஸ்தா சீமா பால்) - 1764, அஸ்ஸாம் ரைபிள்ஸ் - 1706, செயலக பாதுகாப்புப் படை (எஸ்.எஸ்.எஃப்.) - 23 மற்றும் சிஆா்பிஎஃப் - 5490 என மொத்தமாக 25,487 காலிப் பணியிடங்களுக்கு இணையதள முகவரியில் டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்.
தோ்வு குறித்த விவரங்கள், விரிவான பாடத்திட்டத்திற்கு அதிகாரபூா்வ விளம்பர அறிவிப்பைப் பாா்க்கவும். இத்தோ்வுக்கான விழிப்புணா்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக திங்கள்கிழமை (டிச.29) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய இளைஞா்கள் பூம்புகாா் சாலை, பாலாஜி நகா், 2-வது குறுக்கு தெரு, மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் அல்லது 94990 55904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தங்கள் விவரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்வதுடன், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படும் நாளன்று நேரில் பங்கேற்று பயனடையலாம்.
