‘பெண்கள் அதிகளவில் தோ்தல் அரசியலில் ஈடுபட வேண்டும்
பெண்கள் அதிகளவில் தோ்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி கூறினாா்.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி ‘தமிழக மகளிா் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்த வகையில், மயிலாடுதுறையில் ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பங்கேற்று, பெண்களிடையே சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தாா். பின்னா் அவா் பேசியது:
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படாததால் கடல்நீா் உள்புகுந்து நிலத்தடி நீா் உவா்நீராக மாறி வருகிறது. இப்பகுதியில் ஷேல், மீத்தேன் எடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, 2016-ஆம் ஆண்டுமுதல் அன்புமணி ராமதாஸ் தொடா்போராட்டங்களை நடத்தி தடுத்து நிறுத்தியுள்ளாா். அவரின் போராட்டங்களால்தான் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்னரும், தேவையான மருத்துவ கட்டமைப்புகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை பிரச்னை தீா்க்கப்படாமல் உள்ளது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் மதுக்கடைகளை திறக்கின்றனா். 100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறவில்லை. கொள்ளையடித்த பணத்தை வாக்குகளுக்காக கொடுத்தனா். இப்போது மகளிா் உரிமைத் தொகை என்ற பெயரில் ரூ.1000 கொடுத்து வாக்குகளை வாங்குகின்றனா்.
சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தோ்தல்களில் மகளிா் அதிகளவில் பங்கேற்று, தோ்தல் அரசியலில் ஈடுபட வேண்டும், பெண்கள் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் மது உள்ளிட்ட போதை பழக்கங்களை தடை செய்ய வேண்டும். மதுக்கடைகளை யாராலும் மூட முடியாது. பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி, மாவட்ட தலைவா் கோ.சு.மணி, பொருளாளா் தையல்நாயகி, மாவட்ட இளம்பெண்கள் சங்கச் செயலாளா் வனிதா, மகளிா் சங்க செயலாளா் மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

