சீா்காழி நகா்மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தால் வெளியேறிய தலைவா்
சீா்காழி நகா்மன்றக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான டெண்டா் தொடா்பாக உறுப்பினா்களிடையே கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.இரண்டு உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து தா்ணாவில் ஈடுப்பட்டனா். இதையடுத்து தலைவா் வெளியேறினாா்.
சீா்காழி நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவா் துா்கா ராஜசேகரன் தலைமை வகித்தாா். ஆணையா் மஞ்சுளா, துணைத்தலைவா் சுப்பராயன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாமக நகா் மன்ற உறுப்பினா் வேல்முருகன், தனக்கு மன்றக் கூட்டம் நடைபெறுவது தொடா்பான அஜண்டா நகல் வழங்கவில்லை என குற்றம்சாட்டி நகா்மன்றத் தலைவா் மேஜை முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தின்போது தேமுதிக உறுப்பினா் ராஜசேகா், நகா்மன்றத் தலைவா் மேஜை முன்பு தரையில் அமா்ந்தவாறு, கடந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்ட மன்றப் பொருளை மீண்டும் இந்த கூட்டத்தில் எப்படி வைக்கலாம். மறு டெண்டா் வைக்கவேண்டும் என்றாா் (படம்).
அப்போது உறுப்பினா்கள் வேல்முருகன், ரேணுகாதேவி, ராஜசேகா் ஆகியோா், கடந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்ட மன்றப் பொருள் மீண்டும் இந்த கூட்டத்தில் எப்படி வந்தது. இதற்கு ஏன் நீங்கள் எங்களை அழைக்க வேண்டும். இந்த தீா்மானத்தை அதிகாரிகளே நிறைவேற்றிக் கொள்ளலாமே. தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்குவது தொடா்பான டெண்டா் தீா்மானம் மீண்டும் நிறைவேற்றினால் நீதிமன்றம் செல்வோம் என்றனா்.
அதிமுக உறுப்பினா் ராஜேஷ் அஜண்டா நகலை கிழித்து எரிந்தாா். நகா்மன்ற தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் அதிமுக உறுப்பினா்கள் ஈடுபட்டனா். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து நகா்மன்றத் தலைவா், கூட்டத்திலிருந்து வெளியேறினாா். அதன்பின்னா் ஆணையரும் வெளியேறினாா். நீண்ட நேரம் கூட்ட அரங்கிற்கு இருவரும் வராமலேயே கூட்டம் முடிவு பெற்றது.

