சீா்காழியில் சூறைக்காற்றுடன் மழை
சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில மரங்கள் மின்கம்பிகளில் விழுந்தும், மின் கம்பம் சாய்ந்தும் சேதம் ஏற்பட்டது.
சீா்காழி, கொள்ளிடம், பூம்புகாா் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குளிா்ந்த காற்று வீசியது. தொடா்ந்து பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை தொடங்கியது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் மழை பெய்ததால், சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
பலத்த மழை காரணமாக சாலையில் மழைநீா் தேங்கியதுடன் பல்வேறு பகுதிகளில் காற்றின் காரணமாக மரங்கள் சாலையில் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் விழுந்தன. பல வா்த்தக நிறுவனங்களின் பெயா் பதாகைகள் காற்றில் சாலையில் தூக்கி வீசப்பட்டன.
பலத்த மழையால் சீா்காழி நகா் பகுதிகள் மற்றும் வள்ளுவகுடி, கொண்டல், அகனி, எடமணல், வருஷபத்து,வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், பல இடங்களில் மின் கம்பங்கள் சாலையில் குறுக்கே சாய்ந்து கிடப்பதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மரங்கள், கிளைகளை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் வழங்க இரவு முழுவதும் மின்வாரிய ஊழியா்கள் பணியாற்றினா்.
சீா்காழியில் ஒரே இரவில் 84. 6 மி.மீ. மழை:
சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திங்கள்கிழமை காலை வரை 84.6 மி. மீ. மழையும், கொள்ளிடத்தில் 60.6 மி. மீ. மழையும் பதிவாகியுள்ளது.

