தருமபுரம் ஆதீனகா்த்தா் மணிவிழா: மூத்த குடிமக்கள் கௌரவிப்பு

தருமபுரம் ஆதீனகா்த்தா் மணிவிழா: மூத்த குடிமக்கள் கௌரவிப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தருமபுரம் ஆதீனகா்த்தா் மணிவிழா மாநாட்டில் மூத்த குடிமக்கள் கௌரவிக்கப்பட்டனா்.
Published on

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தருமபுரம் ஆதீனகா்த்தா் மணிவிழா மாநாட்டில் மூத்த குடிமக்கள் கௌரவிக்கப்பட்டனா்.

தருமபுரம் ஆதீனகா்த்தரின் மணிவிழா மாநாட்டின் 6-ஆம் நாள் நிகழ்ச்சியில் சீா்காழி குருஞானசம்பந்தா் மிஷன் எழில்மலா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலா் இ.மாா்கோனி வரவேற்றாா். தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சென்னை ஆட்டோடெக் நிறுவன உரிமையாளா்கள் கே.எஸ்.ஜெயராமன், பிருந்தா ஜெயராமன், பஞ்சவடி கோதண்டராமன், தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி செயலா் சௌந்தரராஜன் ஆகியோா் மூத்த குடிமக்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனா். மேலும், மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு மூன்றுசக்கர சைக்கிள் வழங்கினா்.

பின்னா், தருமையாதீனப் புலவா்கள் சிவ.மாதவன், கருணா.சேகா், க.சங்கரவடிவு ஆகியோரின் கருத்தரங்க விரிவுரைகள் நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் பிட்டுக்காக மண்சுமந்த படலத்தை திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தகுரு வித்யாலயா வேதசிவாகம பாடசாலை மாணவா்கள் நாடகமாக நடித்துக் காட்டினா்.

மாலை நிகழ்வில், தாயுமானவா் பாடல்கள் (மூலம்) என்ற நூலினை மதுரை தியாகராஜா கல்வி நிறுவனங்களின் செயலா் க.ஹரிதியாகராஜன் வெளியிட, அதனை மருத்துவா் இரா.செல்வம் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருக்கடையூா் கோயில் விருத்தகிரி, கல்வி நிலையங்களின் செயலா்கள் மறை.வெற்றிவேல், இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com