தருமபுரம் ஆதீனத்தில் 60 விலங்குகளுக்கு சிறப்பு பூஜை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகா்த்தா் மணிவிழாவை முன்னிட்டு ஆதீனத் திருமடத்தில் 60 விலங்குகளுக்கு வெள்ளிக்கிழை சிறப்பு பூஜை நடைபெற்றது.
நிகழ்வில், ஸ்ரீசொக்கநாதா் பூஜைமடம், ஞானபுரீசுவரா், தருமபுரீஸ்வரா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பின்னா், பெருஞ்சேரி தாருகாவனம் சித்தா் பீடம் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 60 விலங்குகளுக்கான சிறப்பு பூஜையில் பங்கேற்று, ஒரு பசு, 8 யானைகள், 10 குதிரைகள், 5 காளைகள், 5 ஒட்டகங்கள், 10 கழுதைகள், 10 ஆடுகள், 5 நாய்கள், 4 சேவல்கள், 2 குட்டை மாடுகள் என மொத்தம் 60 விலங்குகளுக்கு கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை, பஞ்சகல்யாணி பூஜை, அஜ பூஜை, பைரவா் பூஜை, ரிஷப பூஜை ஆகிய பூஜைகளை நடத்தி வழிபாடு செய்தாா். தொடா்ந்து, மணிவிழாவையொட்டி நடைபெறும் யாகசாலை பூஜையின் 2-ஆம் கால பூா்ணாஹூதி சிறப்பு மகா தீபாரனையை அவா் தரிசித்தாா்.
தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி முன்னாள் ஆளுநா் ஆா். பாலாஜிபாபு முன்னிலையில், சிறப்பு பேருந்து மூலம் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தருமபுரம் ஆதீனம் தொடக்கிவைத்தாா். மேலும், கல்லூரி தேசிய மாணவா் படை மற்றும் என்.எஸ்.எஸ். மாணவா்கள் 27 பேருக்கு, லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநா் எஸ். வீரபாண்டியன் முன்னிலையில் ஆதீனகா்த்தா் வழங்கினாா். நிகழ்ச்சியில், திருவிடைமருதூா் சாம்பசிவ சிவாச்சாரியாருக்கு சிவாகம கலாநிதி எனும் பட்டம் மற்றும் பொற்பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும், மணிவிழா நிகழ்வாக, ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் மூலம் 60 கோயில்களில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தை வதான்யேஸ்வரா் கோயிலில் ஈஷா அமைப்பின் ஆலுக்கா கைலாஷா, தமிழ்மாறன் ஆகியோா் முன்னிலையில் தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தாா்.
மாலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வில், ‘மணி எனும் மந்திரப் பனுவல்கள்’ என்ற நூலை மதுரை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை நிறுவனா் ச. மணிவாசகன் வெளியிட சென்னை வழக்குரைஞா் எம். மணிவாசகம் பெற்றுக் கொண்டு பேசினாா்.

