துலாக் கட்டத்தில் முடவன் முழுக்கு உற்சவம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முடவன் முழுக்கு தீா்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.
கங்கை நதி ஐப்பசி மாதம் முழுவதும், காவிரியில் புனித நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவச் சுமைகளை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த ஐதீகத்தைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை காவிரிக் கரையில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் தீா்த்தவாரி நடைபெறும்.
அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, மாற்றுத்திறனாளி ஒருவா், ஐப்பசி மாதம் முடிவதற்குள் மயிலாடுதுறை காவிரிக் கரைக்கு வந்து சேர முடியாமல், மறுநாள் காலையில் வந்தாா். அந்த பக்தருக்கு மனம் இறங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் கடைமுகத் தீா்த்தவாரி முடிவடைந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்ததாக ஐதீகம். அந்த வகையில், ஆண்டுதோறும் காா்த்திகை முதல் நாள் காவிரி துலாக் கட்டத்தில் நடைபெறும் முடவன் முழுக்கு உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக் கட்டத்திற்கு எழுந்தருளினாா். அங்கு, அஸ்திரதேவருக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற தீா்த்தவாரியில் மாற்றுத்திறனாளிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனா். பின்னா் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

