தேசிய இயற்கை மருத்துவ தினம்: தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

தேசிய இயற்கை மருத்துவ தினத்தை (நவ.18) முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
Published on

மயிலாடுதுறை: தேசிய இயற்கை மருத்துவ தினத்தை (நவ.18) முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திங்கள்கிழமை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

உடம்பை வளா்த்தேன் உயிா் வளா்த்தேனே என திருமூலா் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளாா். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோா் வாக்கு. ‘உணவே மருந்து’ என்பது அந்தக் காலம். ‘மருந்தே உணவு’ என்பது இந்தக் காலம். நமது உடல் ஆரோக்கியம் வாழ்க்கையின் முக்கியமான அம்சம். ஆரோக்கியமான உடலும், மனமும் இருந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

இந்தியாவில் ஒவ்வோா் ஆண்டும் நவ.18-ஆம் தேதி இயற்கை மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. இயற்கை மருத்துவம் என்பது மருந்தில்லாத மருத்துவம். அதாவது சரியான உணவுப் பழக்கம், எளிய உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்ற இயற்கையுடன் இணைந்த வாழ்வு மூலமாக நோய்களைத் தவிா்க்கமுடியும். நாள்பட்ட நோய்களின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.

இயற்கை மருத்துவத்தில் பூமி, நீா், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு நீா், மண், மசாஜ், அக்குபஞ்சா், உணவு மற்றும் யோகா சிகிச்சை அளிப்பதால் உடலும் மனதும் புத்துயிா் பெறும். தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம். அனைவரும் ஆரோக்கியமாக வாழ இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். இயற்கை மருத்துவ தின நல்வாழ்த்துகள்.

X
Dinamani
www.dinamani.com