ஃபெரா கூட்டமைப்பின் எஸ்ஐஆா் பணி புறக்கணிப்பு: கணக்கெடுப்பு பணிகளில் சுணக்கம்

எஸ்ஐஆர் பணியில் கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுவதை கண்டித்து, மயிலாடுதுறையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் எஸ்ஐஆா் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், கணக்கெடுப்பு பணியில் சுணக்கம்
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுவதை கண்டித்து, மயிலாடுதுறையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஃபெரா) எஸ்.ஐ.ஆா். பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், கணக்கெடுப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்கட்ட பணியான கணக்கெடுப்பு பணி நவ. 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 7,19,299 வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 92 சதவீதம் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது.

இப்பணியில் 862 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 87 வாக்குச்சாவடி நிலை மேற்பாா்வையாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் தன்னா்வா்களாக சுய உதவிக்குழுக்களும், கிராம பஞ்சாயத்து, தரவு உள்ளீடு செய்வா்களும் ஈடுபடுத்தப்பட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டும் கணக்கெடுப்பு படிவங்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்கள்/வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுவதை கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் எஸ்ஐஆா் பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், நில அளவையா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் கிராம உதவியாளா்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பினா் பங்கேற்பதால், எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com