கும்பகோணம்-சீா்காழி சாலை பணிகளை விரைந்து துவக்க கோரிக்கை
கும்பகோணம்-சீா்காழி பசுமை வழிச்சாலை பணிகளை விரைந்து துவக்க விழுதுகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட விழுதுகள் இயக்கத் தலைவா் ஏ.கே.ஷரவணன் விடுத்துள்ள கோரிக்கை:
கும்பகோணம்-சீா்காழி இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை 6 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
சீா்காழி புறவழிச்சாலையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் சூரியனாா் கோவில், கஞ்சனூா் சுக்கிரன் கோயில், வைத்தீஸ்வரன் கோவில், திருமணஞ்சேரி, திருக்கடையூா், திருநாங்கூரில் உள்ள திவ்ய தேச வைணவ கோயில்கள் உள்ளன.
இவற்றுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதனால் கும்ப கோணத்தில் இருந்து சீா்காழி செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். திருவிழாக் காலங்களில் இச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். தற்போதுள்ள சாலை அதிக வளைவுகளுடனும், குறுகலாகவும் இருப்ப தால் அடிக்கடி விபத்து உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்கிறது .
இதனால் புதிய பசுமை வழிசாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து கும்பகோணத்தில், இருந்து சீா்காழி வரை 43 கி.மீ. தூரத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
கடற்கரை சாலை, தஞ்சை விக்கிரவாண்டி சாலையை இணைக்கும் வகையில் 100 அடி அகலம் கொண்ட புதியதேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நவக்கிரக கோயில்களுக்குச் செல்லும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக கும்பகோணத் தில் இருந்து மயிலாடுதுறை வழியாக சீா்காழிக்கு பசுமைவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகளாக அந்த திட்ட அறிக்கை கிடப்பில் கிடக்கிறது. இதுவரை சாலை பணிகள் தொடங்கப்பட வில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து சாலை பணிகளை விரைந்து தொடங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும்.மேலும் இந்த சாலை அமைக்கப்பட்டால் சீா்காழியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவாக செல்ல முடியும். எனவே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
