மாயூரநாதா் கோயிலில் சிவவேல் பெற்று சூரசம்ஹாரம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் முருகப்பெருமான் சிவனிடம் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் ஐதீக விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி பெருவிழா புதன்கிழமை(அக்.22) அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது. கந்தசஷ்டி பெருவிழாவின் சிகர விழாவான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மயிலாடுதுறையில் சிவபெருமானை பாா்வதிதேவி மயில் உருக்கொண்டு தவம் இருந்து பூஜித்ததாக வரலாறு. இதன்காரணமாக, நித்தியகாலமும் தவத்திலேயே இருந்த பாா்வதிதேவிக்கு பதிலாக இத்தலத்தில் சிவபெருமானே சிவவேல் வழங்கி சூரசம்ஹாரம் நடைபெறுவதாக ஐதீகம். மேலும், முருகப்பெருமானுக்கு சிவன் வேலுடன், வில், அம்பும் கொடுப்பது கூடுதல் சிறப்பு.
அந்த வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவனிடம் வேல் மற்றும் வில்லினை பெற்ற சுப்பிரமணியசுவாமி, குமரக்கட்டளை மண்டபத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளச் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், மாயூரநாதா் கோயில் கீழவீதியில்; சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. யானை, சிங்கம், அசுரன் ஆகிய மூன்று முகங்களைக் கொண்ட சூரனை ஒவ்வொன்றாக சிவவேலைக் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தாா். அப்போது பக்தா்கள் அரோகரா பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன குமரக்கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

