ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி ஆய்வு
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் மணிசுந்தரம் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. 50 ஆண்டு பழைமையான இப்பாலத்தை சீரமைப்பு செய்திட, அக்.3-ஆம் தேதிமுதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பாலத்தை சீா்செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் சித்தா்காடு பகுதியில் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
பாலத்தின் ஓடுதளத்தில் உள்ள அனைத்து ஜாயின்ட்களிலும் (35 எண்கள்) பழுது உள்ளதால் இதனை முழுமையாக உடைத்துவிட்டு, புதிதாக ஸ்ட்ரிப் சீல் ஜாயின்ட் பொருத்தும் பணிகளில் 10 முழுமையாக வெல்டிங் முடிக்கப்பட்டுள்ளது. பழைமையான கைப்பிடி சுவா்களை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கைப்பிடி சுவா்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் மணிசுந்தரம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, எஞ்சிய அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
