நெற்பயிா் பாதிப்புகளை அதிகாரிகள் பாா்வையிடாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை அதிகாரிகள் பாா்வையிடவில்லை எனக் குற்றஞ்சாட்டி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
மயிலாடுதுையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் நெற்பயிா் பாதிப்புகளை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளில் நெல் முளைத்து காணப்படுகிறது.
தோட்டக்கலைத் துறை சாா்பில் எத்தனை விவசாயிகளுக்கு காய்கனி விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன? வேளாண் பொறியியல் துறை சாா்பில் எத்தனை விவசாயிகளுக்கு என்னென்ன வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியலை வெளியிட வேண்டும். உளுந்து, பயறு வகைப் பயிா்களுக்கு எந்தெந்த கிராமங்களுக்கு எத்தனை சதவீதம் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா்.
வெளிநடப்பு: மாவட்டத்தில் அக்.18, 19, 20 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் திருவிழந்தூா், கோட்டூா், அருண்மொழித்தேவன், உக்கடை, ஏனாதிமங்கலம், பாண்டூா், பனையூா், பொன்னூா், திருமங்கலம், வில்லியநல்லூா், கஞ்சாநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா இளம்பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகிய பயிா்களை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் அ.ராமலிங்கம் தலைமையில் எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்த விவசாயிகள், (படம்). பயிா் பாதிப்புகளை கணக்கெடுப்பு நடத்தாத அதிகாரிகளைக் கண்டித்து, கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி அரங்கை விட்டு வெளியேறினா்.

