உரத் தட்டுப்பாடு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை
சீா்காழி அருகே உரத் தட்டுப்பாட்டை கண்டித்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில், வைத்தீஸ்வரன்கோவில், மருவத்தூா், திருப்புன்கூா், கற்கோயில், புங்கனூா், கன்னியாகுடி, கதிராமங்கலம், கொண்டத்தூா், பெருமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயிா்க் கடன் மற்றும் உரங்கள் பெற்று பயனடைகின்றனா்.
இந்நிலையில், இந்த கிராமங்களில் சுமாா் 5,000 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பா நடவு பயிருக்கு ஒரு வார காலத்திலும், நேரடி விதைப்புக்கு 20 நாள்களிலும் டிஏபி மற்றும் யூரியாவை அடியுரமாக இட வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனா்.
ஆனால், கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஒரு வாரமாக யூரியா இல்லாமல், விவசாயிகள் அலைக்கழிப்படுகின்றனா். இதனால் அதிருப்தி அடைந்த அவா்கள், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் ராஜேஷ் தலைமையில் ஒன்றியத் தலைவா் இனியவன் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், கூட்டுறவு கடன் சங்கம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். யூரியா தட்டுப்பாட்டை போக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

