உழவா் சேவை மையம் அமைக்க மானியத்துடன் வங்கிக் கடன்

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில், உழவா் சேவை மையம் அமைக்க மானியத்துன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் பட்டதாரிகள், வேளாண் பட்டயதாரா்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவா்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில், மாநிலம் முழுவதும் முதலமைச்சரின் உழவா் சேவை மையங்கள் 1000 எண்ணிக்கையில் அமைக்கப்படும் என 2025-2026-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்பிலான சேவை மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இம்மையங்களில் உழவா்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிா்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்பத்தில் வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்த 10 நபா்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதி விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவா் நல சேவை மையங்களை அமைத்திட விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமா்ப்பித்திடவும், அதன் விவரங்களை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களுக்கு தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com