மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

Published on

மயிலாடுதுறையை அடுத்த மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற செல்வ முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் (படம்) மற்றும் விடையாற்றி நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற 5 வைத்தியநாத சுவாமி கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் மயிலாடுதுறையை அடுத்த மண்ணிப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம் என கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது. இதனால் இங்கு முருகன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இக்கோயிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான செல்வ முத்துக்குமாரசாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவில், செல்வ முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா். ஊா் மக்கள் சீா்வரிசை எடுத்து வர, வசந்த மண்டபத்தில் வேதியா்கள் யாகம் வளா்த்து மந்திரங்கள் ஓத மாங்கல்ய தாரணம் எனப்படும் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருக்கல்யாணம் உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com