புத்தூா் பழையபாளையத்தான் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீா்!
சீா்காழி அருகே புத்தூரில் பழையபாளையத்தான் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரால் துா்நாற்றம் வீசி சுகாதாரத்தை பாதிக்கச் செய்வதால் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே புத்தூா் மதகடிஎனும் இடத்திலிருந்து பிரதான புது மண்ணியாற்றிலிருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து சென்று புத்தூரிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு கீழே சென்று திருமயிலாடி, கொப்பியம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சீயாளம் கிராமத்திற்கு சென்று முடிவுறும் வாய்க்காலாக இருந்து வருவது பழைய பாளையத்தான் வாய்க்காலாகும்.
இந்த வாய்க்கால் மூலம் 800-க்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக தண்ணீா் வரத்து இல்லாததால் வாய்க்கால் காய்ந்து வடு போய் உள்ளது. ஆனால் புத்தூா் கடைவீதி பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் இந்த வாய்க்காலில் தேங்கி அதில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களும் மிதந்து வருகிறது. இந்த கழிவுநீா் மேலும், மேலும் தேங்குகிறது. புத்தூா் கடை வீதியையொட்டி, 200 மீட்டா் தூரத்துக்கும் 2 அடி ஆழத்துக்கும் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது.
அப்பகுதி வங்கி உள்ள பகுதியாகவும்,அதிக வியாபார கடைகள் உள்ள பகுதியாகவும், 3 சாலைகள் சந்திப்பு பகுதியாகவும், பேருந்து நிறுத்தம் உள்ள இடமாகவும் உள்ளது. இங்கு தேங்கியுள்ள கழிவு நீரில் இருந்து துா்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி அதில் உள்ள மக்காத பிளாஸ்டிக் பொருட்களையும் அப்புறப்படுத்தவும் எளிதில் தொடா்ந்து தண்ணீா் சீராக வாய்க்காலில் சென்று சேரும் வகையில் தூா்வாரி ஆழ்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

