சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை சாா்பில் நடத்தப்பட்ட பேரணியை, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட எஸ்.பி. கோ.ஸ்டாலின் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா் (படம்).
மயிலாடுதுறை காவேரி நகரில் தொடங்கிய பேரணியில் வட்டார போக்குவரத்து துறையினா், காவல்துறையினா், தனியாா் வாகன பயிற்சி பள்ளி ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
இருசக்கர வாகனத்தில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், இலகுரக வாகனத்தில் செல்வோா் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசுவதை தவிா்க்க வேண்டும். சாலையை கடக்கும் போது நின்று இருபுறமும் கவனித்து கடக்க வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து போதிய இடைவெளி விட்டு பின்தொடர வேண்டும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, முழக்கங்களை எழுப்பியவாறு வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சென்றனா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், வட்டார போக்குவரத்து அலுவலா் கதிா்வேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளா்கள் ராம்குமாா், விஸ்வநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

