தரங்கம்பாடிக்கு ரயில் சேவை: குடியரசு துணைத் தலைவரிடம் மனு
மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கி, வேளாங்கண்ணி வரை நீட்டிக்க குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம், மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் மீட்புக்குழு செயலா் கே. ராஜேந்திரன் வலியுறுத்தினாா். (படம்)
இதுகுறித்து, சென்னையில் அவா் சனிக்கிழமை அளித்த மனு: மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், திருக்கடையூா், தில்லையாடி வழியாக தரங்கம்பாடி வரை இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டாவின் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த ரயில் தடத்தை மீண்டும் செயல்படுத்துவதோடு அதை ரூ.172 கோடியில் அகல ரயில் பாதையாக அமைக்க வேண்டும்.
மேலும் திருநள்ளாா், நாகூா், வேளாங்கண்ணியுடன் இணைத்து வேளாங்கண்ணி, திருக்கடையூா் மயிலாடுதுறை வழியாக புதுதில்லி ரயில் சேவை ஏற்படுத்தினால் மும்மதமும் பயன்பெறுவதோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும்.
குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் மூலம் மத்திய ரயில்வே அமைச்சா், நிதி அமைச்சருக்கு பரிந்துரை செய்து மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

