பள்ளிகளில் செயல்படுத்தப்படும் புரவலர் திட்டங்கள், அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கும், பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற, 138 புரவலர்களுக்குப் பட்டயம் வழங்கும் விழாவில் அவர் பேசியது :
தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்தும் அளித்துப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளின் கல்விக்காக பெற்றோருக்கு ஒரு பைசா கூட செலவு ஏற்படாத வகையில், அரசுத் திட்டங்களை செயல்படுத்துகிறது.
பள்ளிக்கான சிறு, சிறு செலவினங்களை பள்ளியின் சார்பிலேயே மேற்கொள்ள புரவலர் திட்டங்கள் உறுதுணையாக உள்ளன. புரவலர் திட்டத் தொகைகள் அனைத்தும் வங்கிகளில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் கிடைக்கும் தொகை, பள்ளியின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி வளர்ச்சிப் பெறவும், மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் உயரவும் புரவலர் திட்டங்கள் உறுதுணையாக உள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி உதவி அளித்த புரவலர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்றார் அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்துப் பேசுகையில், கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குறுகிய காலத்துக்குள், அதிக எண்ணிக்கையில் புரவலர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இப்பள்ளியில் புரவலர் நிதியாக ரூ. 1.30 லட்சம் வங்கியில் வைப்பு வைக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களிலும் அதிக எண்ணிக்கையில் புரவலர்களை சேர்க்க ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புரவலர்களுக்கு அமைச்சர் பட்டயங்களை வழங்கி பாராட்டினார்.
கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ராஜாத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், சீனிவாசன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தங்க. கதிரவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மகேஸ்வரி, ஊராட்சித் தலைவர் மனோகரன் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. பாலு நன்றி கூறினார்.
2 மாதங்களில் 123 புரவலர்கள் சேர்க்கை
கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2003- 04-ம் ஆண்டு காலத்தில் 15 பேர் புரவலர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர், புரவலர் சேர்க்கையில் பெரியளவில் முன்னேற்றம் இல்லாதிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 123 புதிய புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய புரவலர் சேர்க்கையில் தீவிரம் காட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.