காரைக்கால் வரை பயன்பாட்டில் உள்ள ரயில் சேவையை திருநள்ளாறு வரை முதல் கட்டமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சரை, புதுச்சேரி அரசு நிர்பந்திக்க வேண்டும். அவசர கதியில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் இப்பிரச்னையைக் கையில் எடுத்துச் செயல்பட வேண்டுமென காரைக்கால் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காரைக்கால் வரையிலான ரயில் சேவை தொடங்கப்பட்டது. நாகூர் முதல் காரைக்கால் வரை 10.5 கிலோ மீட்டர் தூரம் புதிய அகல ரயில்பாதை அமைத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரளம் வரை புதிதாக அகல ரயில்பாதை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் - பேரளம் வரை இருந்த மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சேவை நிறுத்தப்பட்டாலும் ரயில்வேயிடம் இதற்கான நிலம் அப்படியே இருக்கிறது. எனவே, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அவசியமில்லை.
இந்த புதிய திட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கும்போது சுமார் ரூ. 150 கோடி தேவையெனத் தெரிவிக்கப்பட்டது. இப்போது ரூ. 200 கோடி தேவையிருக்குமெனக் கூறப்படுகிறது. காரைக்கால் - பேரளம் வரை புதுச்சேரி பகுதிகள், தமிழகப் பகுதிகள் உள்ளதாலும், ஏராளமான கிராமங்கள் உள்ளதாலும் புதை வழி, மேம்பாலம் உள்ளிட்டவை அமைக்கும் திட்டத்துக்கு கூடுதல் செலவாகும் என்பதால் திட்டத்தை நிறைவேற்றுவது தள்ளிக்கொண்டே போவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில அரசு, காரைக்கால் பகுதி மக்கள் பிரதிநிதிகள் எவரும் மத்திய அரசை வலியுறுத்தவில்லையென பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், எந்தவொரு மாநிலத்திலிருந்தும் மக்கள் காரைக்கால் வரை வந்து சேர ரயில் வசதி இருக்கிறது. திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது.
எனவே, காரைக்கால் - பேரளம் வரையிலான 23 கிலோ மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற காலதாமதம் ஆவதால், காரைக்கால் முதல் திருநள்ளாறு வரை 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைத்து, 5, 6 ரயில்கள் நிற்கும் வகையில் நிலையம் அமைத்தால், நாட்டில் எந்தவொரு பகுதியிலிருந்தும் திருநள்ளாறுக்கு எளிதில் வந்து சேர வாய்ப்பு கிடைத்துவிடும். காரைக்கால் - பேரளம் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் முதல்கட்டமாக இந்த சிறிய தொலைவை அமைக்கலாமென பரவலான வலியுறுத்தல் உள்ளது.
ரயில்வே பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான கருத்துகளை தெரிவிக்குமாறு ரயில்வே நிர்வாகம் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தருணத்தில் புதுச்சேரி ஆட்சியாளர்கள், புதுச்சேரி பகுதி மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மத்திய அரசுக்கு ஆலோசனைத் தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் - பேரளம் திட்டத்துக்கு தனியார் பங்களிப்பு இருந்தால் விரைவாக நிறைவேற்ற முடியுமென ரயில்வே தலைமை அதிகாரிகள் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தனர்.
காரைக்கால் முதல் திருநள்ளாறு வரையிலான குறுகிய தொலைவில் ஒரு இடத்தில் வாஞ்சியாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். இதைத் தவிர, வேறு திட்ட செலவுகள் இந்தத் தொலைவில் அதிகரிக்க வாய்ப்பில்லை.
பொதுமக்கள், தனியார் பங்களிப்பை பெறுவதற்கான நடவடிக்கையை இப்போதே எடுக்க வேண்டும். மத்திய ரயில்வே துறை, திருநள்ளாறு ரயில் திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தும் சூழலை புதுச்சேரி அரசு உருவாக்க வேண்டும். வரும் 2017-ஆம் ஆண்டில் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதற்குள் ரயில் சேவை வந்துவிட்டால், நாட்டின் பல பகுதியிலிருந்து மக்கள் எளிதில் திருநள்ளாறு வந்து சேர முடியும்.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில் பயன்பாட்டாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் வி.ஆர். தனசீலன் புதன்கிழமை தெரிவித்தது: காரைக்காலில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த மாதம் நவ. 26-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் இயக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்துக்கு வலியுறுத்தியுள்ளேன்.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்தியதுடன், முதல்கட்டமாக காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வரை ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினரைச் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.