நாகப்பட்டினம்- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை உடனடியாக அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே வக்காரமாரி கிராமத்துக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் முட்டம் கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.45 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மணல்மேடு வழியாக காட்டுமன்னார்கோயில், வடலூர், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு எளிதாக வாகனங்களில் சென்றுவரமுடியும். அத்துடன் பயண தூரமும் சில கி.மீட்டர்கள் குறையும். இதனால் இப்பாலம் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதிதாக பாலம் திறக்கப்பட்டும் அதற்கான இணைப்பு சாலைகள் முறையாக அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் தற்போது வக்ரமாரி,
அகரமணல்மேடு ஆகிய கிராமங்களின் குறுகிய தெருக்களின் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. முட்டம் அருகே தில்லைநாயகபுரத்தில் உள்ள மணல்குவாரிக்கு வரும் லாரிகள், டிராக்டர்கள் இணைப்பு சாலை இல்லாமல் குடியிருப்பு தெரு வழியாக இயக்கப்படுவதால் விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது.
ஆகையால் நெடுஞ்சாலைத் துறையினர் உயர்மட்ட பாலத்துக்கு முறையான இணைப்பு சாலை அமைத்து, போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மணல்மேடு பகுதியைச் சேர்ந்த வியாபாரி குமார் கூறியது:
இந்த பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பதன் மூலம் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எளிதாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னைக்கும் பயண தூரம் மற்றம் நேரம் குறையும்.
எனவே, உடனடியாக இணைப்பு சாலை அமைப்பதோடு, குண்டும், குழியுமாக உள்ள மணல்மேடு- வக்காரமாரி சாலையை சீரமைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.