சீர்காழியில் மாதர் சங்கத்தினர் சாலை மறியல்
சீர்காழியில் இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாதர் சங்கத்தினர் சாலைமறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
சீர்காழியை அடுத்த அரசூர் ஊராட்சி காப்பியக்குடி மந்தக்கரையைச் சேர்ந்தவர் நெ.பிரபாவதி (25). அதே பகுதியில் வசிப்பவர் ராஜா (எ) சதீஸ்குமார் (30). இவர்கள் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பிரபாவதி கர்ப்பமடைந்தார்.
இந்நிலையில், பிரபாவதியை திருமணம் செய்துகொள்ள சதீஸ்குமார் மறுத்தாராம். இது குறித்து சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் பிரபாவதி புகார் அளிதார். அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி சதீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இதுவரை இப்புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அதன் வட்டத் தலைவர் ஆர்.இந்திராகாந்தி தலைமையில் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, நூர்ஜகான், ராணி, லதா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு காவல் துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த மறியலால் மயிலாடுதுறை பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
