கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவுபெறுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள  கிராமங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் கொள்ளிடம்
Updated on
2 min read

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள  கிராமங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழகத்தில்  உள்ள 13 கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான நாகை மாவட்டம் சுமார் 2,550 சதுர கிலோ மீட்டர்  பரப்பளவைக் கொண்டது.  இம்மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம்,  தரங்கம்பாடி மற்றும் மயிலாடுதுறை ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், கடல்நீர் உள்புகுந்து நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆழ் குழாய் கிணறுகள் அதிக ஆழத்தில் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால்  நீரில் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் உள்ளன. இதனாலும் நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் மற்றும்  மயிலாடுதுறை ஆகிய  வட்டங்களில் நிலத்தடி நீரில்  ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, நீர்வளம் ஆதாரத் துறையின் மூலம்  களஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தப் பகுதிகளில்  295 கிராமங்களில் நிலத்தடி நீரில்  இரும்புத் தாதுக்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இந்த 295  கிராமங்களுக்கும், 315 வழியோர குடியிருப்புப்  பகுதிகளுக்கும், கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் வழங்குவதற்காக கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக, மயிலாடுதுறை வட்டம் சீபுலியூர், குமாரமங்கலம் ஆகிய 2 இடங்களிலும்  கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம்  குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, கடந்த  2011-ஆம் ஆண்டில் ரூ.105  கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை, தமிழ்நாடு  குடிநீர்  வடிகால் வாரியம் மேற்பார்வையில், சென்னையைத்  தலைமையிடமாகக் கொண்ட ஒரு  தனியார் நிறுவனம் மேற்கொண்டது.  50  சதவீதப் பணிகள் முடிவுற்ற  நிலையில்  தனியார் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால்  சுமார் 4 ஆண்டுகள் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், 3.8.2015-இல் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு  எஸ்எம்சி இன்பராஸ்ட்ரக்சர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, 2017-ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதத்துக்குள் பணிகளை  நிறைவு செய்ய வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை.
 மயிலாடுதுறை வட்டம் சீபுலியூர், தலைஞாயிறில் தலா 6.20 லட்சம் லிட்டர் கொள்ளளவும், காப்பியக்குடியில் 1.45  லட்சம் லிட்டர் கொள்ளளவும், குன்னத்தில் 0.85 லட்சம் லிட்டர் கொள்ளளவும், செம்மங்குடியில் 1.05 லட்சம் லிட்டர் கொள்ளளவும், வள்ளாலகரத்தில் 1.10 லட்சம் லிட்டர் கொள்ளளவும்,  நடுக்கரையில் 1.55 லட்சம் லிட்டர் கொள்ளளவும்,  கூடலூரில் 0.40 லட்சம் லிட்டர் கொள்ளளவும் கொண்ட  குடிநீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டுமானப் பணிகள்  மட்டுமே முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் 88 துணை    குடிநீர் சேகரிப்புத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகளும், பிரதான நீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து  ஏற்கெனவே கிராமங்களில் உள்ள மேல்நிலைத் நீர்தேக்கத்  தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான  குழாய்கள் பதிக்கும் பணிகளும் முடிவு பெறாத நிலையில்  உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின், மயிலாடுதுறை திட்டக்  கோட்ட நிர்வாகப் பொறியாளர் பி. ராமச்சந்திரன் கூறியது: தற்போது வரை 80 சதவீதப் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இன்னும் 2 மாதங்களில் சீர்காழி பகுதிகளில்  நடைபெறும் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பெற்று, குடிநீர் விநியோகம் செய்யப்படும். மற்றப் பகுதிகளுக்குப் படிப்படியாக திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இத்திட்டப்பணியை மேற்கொண்டுவரும், எஸ்எம்சி  இன்பராஸ்ட்ரக்சர்ஸ்  நிறுவனத்தினர் கூறியது:  பல்வேறு  இடர்பாடுகளுக்கிடையே பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும்  ஓராண்டுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். பின்னர், முன்னோட்டம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.
உயிர் வாழ குடிநீர் மிகவும் அத்தியாவசியமானது மட்டுமின்றி, ஆதாரமானதும் கூட எனவே, குடிநீர் திட்டப்பணியை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com