அரசு உதவி பெறும் பள்ளி சீரமைக்கப்படுமா?

தரங்கம்பாடி வட்டம், அரசூர் கிராமத்தில்  பராமரிப்பின்றி செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை
Updated on
1 min read

தரங்கம்பாடி வட்டம், அரசூர் கிராமத்தில்  பராமரிப்பின்றி செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், அரசூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி 1962-இல் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் கொடைவிளாகம், அரசூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளி பழைமையான ஓட்டுக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. போதிய வகுப்பறைகள், இருக்கைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறைகள் இல்லை. மேலும், அடிப்படை வசதிகளும் குறைவாக உள்ளது. குடிநீருக்காக மாணவ, மாணவிகள்,  பள்ளியின் அருகில் உள்ள கொடைவிளாகம் கிராமத்துக்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது.
பள்ளி செயல்பட்டு வரும் கட்டடமானது பழைய  ஓட்டுக் கட்டடம் என்பதாலும், தரமற்ற நிலையில் உள்ளதாலும் வகுப்பறையினுள் அமருவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இதுகுறித்து சமூக ஆர்வலரும், புரட்சி கர இளைஞர்  கழகத்தின் மாவட்ட நிர்வாகியுமான எஸ். வீரச்செல்வன்  கூறியது:
மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்  இல்லாத நிலையில் செயல்பட்டு வரும் அரசு உதவிப் பெறும் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினரிடமும், கல்வித்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, ஜன. 18-ஆம் தேதி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com