வேதாரண்யம் பகுதியில் வறட்சியால் சவுக்கு மரக்கன்றுகள் பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வறட்சி காரணமாக சுமார் 7 ஆயிரம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்றுகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வறட்சி காரணமாக சுமார் 7 ஆயிரம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்றுகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
வேதாரண்யம் பகுதி மானாவாரி நிலப்பரப்பை அதிகமாகக் கொண்டுள்ளதால், இங்கு சவுக்கு மர உற்பத்தி வேளாண்மையில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இப்பகுதியில் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி தொடங்கி சுமார் 5 ஆண்டுகளில் இருந்து மரங்கள் அறுவடைக்கு வரும். அரசு மற்றும் தனியார் காகித தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், விறகு தேவை, கரி தயாரிப்பு போன்ற பல தேவைகளுக்கு இந்த மரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
சாகுபடியின் தொடக்க நிலையில், நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் வயல்களிலேயே ஊடு பயிர் முறையில் சவுக்கு நடவு செய்யப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் சவுக்கு சாகுபடி மட்டுமே பராமரிக்கப்படும்.
நெல் சாகுபடிக்கு போதிய பாசன நீர் இல்லாமை, வெள்ள காலத்தில் வடிகால் வசதி குறைபாடு, உரம், மருந்து, களை மேலாண்மை, ஆள்கள் பராமரிப்பு போன்ற கூடுதல் செலவினங்களை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபகரமான பயிராக சவுக்கு உள்ளது.
இதனால், குரவப்புலம், கத்தரிப்புலம், ஆயக்காரன்புலம், செம்போடை, தேத்தாக்குடி, செட்டிப்புலம், மருதூர், நெய்விளக்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் சவுக்கை சாகுபடி செய்கின்றனர்.
நடவுப் பணிக்கான சவுக்கு மரக்கன்றுகள் கத்தரிப்புலம், குரவப்புலம் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.  இதை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் வயல்களில் ஈரப்பதம் குறைந்துபோனது. வழக்கமாக ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சவுக்கு மரக்கன்றுகள் நடவுப் பணி முற்றிலுமாக முடங்கிவிட்டது.
ஏற்கெனவே, ரூபாய் நோட்டுகள் விவகாரத்தால் சவுக்கு மரங்களின் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டுக்கான நடவுப் பணியும், நாற்றங்கால்  உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடவுப் பணியின்போது வேலைவாய்ப்பை பெரும் பெண் விவசாயத் தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டு வரும் குரவப்புலம் என். செல்லத்துரை கூறியது:
ஒரு ஏக்கர் நிலத்தில் சவுக்கு மரக்கன்றுக்கு நாற்றங்கால் அமைத்துள்ளேன். இதற்கு இதுவரை ரூ. 75 ஆயிரம்  செலவாகியுள்ளது. வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. தனியாரிடம் வட்டிக்கு வாங்கித்தான் சவுக்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறோம்.
வழக்கமாக ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் ரூ. 200 முதல் ரூ. 250 வரை விலைபோகும். ஆனால், நிகழாண்டு சவுக்கு மரக்கன்றுகளை வாங்க விவசாயிகள் யாரும் வரவில்லை. வறட்சி காரணமாக ஈரப்பதம் குறைந்துபோனதால் சவுக்கு மரக்கன்றுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாற்றங்காலிலேயே சவுக்கு மரக்கன்றுகளை வைத்தால் முற்றிவிடும். அதை நடவு செய்ய முடியாது. அடுத்த ஆண்டு உற்பத்திக்காக அவற்றை அழித்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்று உற்பத்தியாளர்களுக்கு அரசு நிவாரணமும், கடன் வசதியும் அளிக்க வேண்டும்
என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com