சீர்காழி ரயில் நிலையத்தில் கணினி பிரிண்டர் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக முன்பதிவு டிக்கெட் பெறும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் 20 கி. மீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்குச் சென்று முன்பதிவு ரயில் டிக்கெட் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீர்காழியில் பணங்காட்டாங்குடி செல்லும் சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பயணிகள் ரயில்கள் மட்டும் நின்று சென்று வந்த
இந்த ரயில் நிலையத்தில், 2007-ஆம் ஆண்டு நிறைவடைந்த மயிலாடுதுறை-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிகளுக்கு பிறகு விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன.
மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது தொலைதூர விரைவு ரயில்களும் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. பேருந்து கட்டணம் அதிகரித்து வருவதாலும், உடல் அசதியின்றி பயணம் செய்ய முடியும் என்பதாலும் தற்போது பொதுமக்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். சீர்காழி அருகே அமைந்துள்ள நவகிரக தலங்களான வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கீழபெரும்பள்ளம் மற்றும் சீர்காழி சட்டைநாதர் கோயில், உலகளந்தபெருமாள் கோயில்களுக்கும், சீர்காழி அருகேயுள்ள 11திவ்யதேச பெருமாள் கோயில்கள், பஞ்ச நரசிம்மர் பெருமாள் கோயில்கள் ஆகியவற்றுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் பக்தர்கள் ரயில் பயணமாக சீர்காழி ரயில் நிலையத்தில் வந்திறங்கி செல்கின்றனர்.
இதுபோன்று சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், க ல்லூரி மாணவ, மாணவியர், வர்த்தகர்கள் செலவு குறைவான எளிதான ரயில் பயணத்தை அதிகம் நாடுகின்றனர். இவ்வாறு ரயில் பயணம் இன்றியமையாத தற்போதைய சூழலில் சீர்காழி ரயில் நிலையத்தின் தரம் மேம்படுத்தப்படாமல் இருப்பது பொதுமக்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது. சீர்காழி ரயில் நிலைய அலுவலகத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர் காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 1 மணி நேரமும் செயல்படுகிறது. குறைவான நேரம் மட்டும் உள்ள டிக்கெட் கவுன்டரில் உள்ள கணினி மிகவும் குறைந்த சக்தி கொண்டதாக (பழைய ரேம் குறைந்த வேகம் கொண்டது) உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு டிக்கெட் வழங்கும் பிரிண்டர் பழுதடைந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் முன்பதிவு டிக்கெட் பெற கவுன்டரில் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் டிக்கெட்டில் எழுத்துகள்சரிவர அச்சாகாமல் அறைகுறையாக அச்சாகிறது. குறிப்பாக, பி.என்.ஆர். நம்பர் சரியாக பிரிண்ட் ஆவதில்லை. இதனால் பயணத்தின்போது டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் நீண்ட விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற குளறுபடிகளால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறைக்கு சென்று முன்பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்து ஆன்மிக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தில்லை.நடராஜன் கூறியது: சீர்காழி ரயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் பெறுவதற்கு அரை மணி நேரம் வரை காத்திருக்கும் நிலையுள்ளது. முக்கியமாக பிரிண்டர் பழுதால் முன்பதிவு டிக்கெட்டுக்கு பணம் செலுத்திவிட்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து பிரிண்டர் சிறிது நேரம் கழித்து சீரானதும் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் நிலை நீடிக்கிறது.
சீர்காழி ரயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே உள்ளதால் அந்த கவுன்டரில் தட்கல் டிக்கெட்டுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றனர். முன்பதிவு செய்ய வரும் பயணிகளை காக்க வைக்கின்றனர். தட்கல் முடிந்ததும் முன்பதிவு டிக்கெட் வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கும் டிக்கெட்டிலும் எழுத்துகள், எண்கள் சரியாக அச்சாவதில்லை. அடிப்படை வசதிகள் ரயில் நிலையத்தில் இல்லை. கழிவறைகள் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றன. டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமும் இயங்கவில்லை. இரவு நேரங்களில் மின்விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து கிடக்கிறது என்றார்.
நகைக் கடை பணியாளர் சுப்பிரமணியன் கூறியது:
நான் கடந்த சில நாள்களுக்கு முன் எனது முதலாளிக்கு ராஜஸ்தான் செல்வதற்காக முன்பதிவு செய்து டிக்கெட் பெற மாலையில் நிலையத்துக்குச் சென்றேன். அப்போதும் வழக்கம்போல் பிரிண்டர் பழுதடைந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றுச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற கால தாமதத்தால் பல பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு மயிலாடுதுறைக்கு செல்கின்றனர். கணினி மற்றும் பிரிண்டர் குறைபாட்டை சீர்செய்யும் வரை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.