சிக்க​ல் ‌சிக்​க‌ல்​க‌ள் தீ‌ர்​வ‌து எ‌ப்​‌பபோ‌து?

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளால் தடைபட்டுள்ள வடிகால் வசதியை மீட்டெடுக்க வேண்டும்  என்பது அப்பகுதி
Updated on
3 min read

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளால் தடைபட்டுள்ள வடிகால் வசதியை மீட்டெடுக்க வேண்டும்  என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
சிக்கல் - நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராட்சி. எனினும், ஆன்மிகச் சிறப்புகளால், இங்கு கோயில் கொண்டுள்ள சிக்கல் சிங்காரவேலவரால் உலகப் புகழ்
பெற்ற ஊர்.
காமதேனுவின் பாலால் நிரம்பிய குளத்திலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெயைக் கொண்டு வசிஷ்டர் இத்தலத்தில் சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து பூஜித்தார் எனவும், பூஜைக்கு பின்னர் அதை கையிலெடுத்துச் செல்ல முயன்ற போது அது எழும்பி வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலத்துக்கு சிக்கல் என்றும்,இத்தலத்து இறைவனுக்கு வெண்ணெய்நாதர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கோயில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரனை வதம் செய்ய அவதாரம் எடுத்த முருகப் பெருமான் சிக்கல் நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில் உள்ள அருள்மிகு அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெற்று திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது கந்த புராணம் உணர்த்தும் ஐதீகம். இந்த ஐதீகப்படி இங்கு நடைபெறும் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி மிகப் புகழ் பெற்றது. சக்திவேல் பெறும் சிக்கல் சிங்காரவேலவரின் திருமுகத்தில் வியர்வை ததும்பும்  அதிசயம் இப்புகழுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு அடுத்த நிலையில் உள்ள முருகப் பெருமானின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக உள்ள சிக்கல் கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக உள்ளது இவ்வூர். நாகை - திருவாரூர் - தஞ்சாவூர் பிரதான சாலையை உள்ளடக்கிய இவ்வூர் மக்கள் நடமாட்டத்துக்கும், போக்குவரத்து பரபரப்புக்கும்  பஞ்சமில்லாத ஊர்.
சிக்கல் ஊராட்சியில் சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இதில், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிற பகுதிகளிலிருந்து குடியேறி வாடகை வீடுகளில் வசிப்பவர்கள். நாடார் தெரு, யாதவர் தெரு, பள்ளிவாசல் தெரு, நல்லகுத்தியார் தெரு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தெருக்கள் இங்கு அமைந்துள்ளன.
பெரும்பாலான தெருக்களின் சாலைகள் தார்ச் சாலையாக மாறிவிட்ட போதிலும், சில இடங்களில் மண் மணக்கும் மண் சாலைகளும் நீடிக்கின்றன. மண் சாலையாக இருந்து தார்ச் சாலையாக தரம் உயர்த்தப்பட்ட சாலைகளும் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. சாலை சீரமைப்புக் கோரிக்கைகள் விஸ்வரூபம் அடையும் போது மட்டுமே தாற்காலிகமாக அல்லது நிரந்த சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதும், புதுப்பிக்கப்பட்ட சாலைகளும் சில நாள்களிலேயே பழைய நிலையை அடைவதும் வழக்கமாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளால் அடைபட்ட வடிகால்களை அடைய முடியாத மழை நீர் சாலைகளில் தேங்குவதே இப்பகுதி சாலைகள் அடிக்கடி பழுதடைய முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இந்த சாலையோரத்தில் இருந்த வடிகால்கள் மூலமாக செல்லும் மழை நீர், பள்ளிவாசல் குட்டையை அடைந்து, அங்கிருந்து பொன்னம்பல குட்டை வழியே தொம்ப வாய்க்காலில் சேரும். ஆனால், காலப்போக்கில் குட்டைகளுக்கு செல்லும் பாதைகள் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி, அடைபட்டு போனதால், மழை நீர் வடிய வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் பாதைகள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சியுள்ள பகுதிகள் குப்பைகளால் நிறைந்து, அசுத்தத்தின் அடையாளமாக உள்ளன.
வேண்டும் வடிகால்...
சிக்கல் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறியது: 1932-ஆம் ஆண்டுகளில் சிக்கல் பகுதிக்கு வந்த நகரத்தார்கள், சிங்காரவேலவர் கோயிலை புனரமைத்ததுடன், தெரு ஓரங்களில் வடிகால் வசதிகளையும் ஏற்படுத்தினர். இதனால் மழைநீர் தேங்காமல் உடனடியாக சென்று வாய்க்காலில் கலந்து விடும். ஆனால் காலப்போக்கில் கடைகளும், குடியிருப்புகளும் பெருகவே வடிகால்கள் அடைக்கப்பட்டுவிட்டதால், மழைநீர் வடிய வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
சிக்கல் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் கூறியது: வடிகால் வசதி இல்லாததால்,மழைக்காலங்களில் சாலைகளே வடிகால்களாக உள்ளன.  பள்ளி முன்புற சாலை வழியாகவே மழைநீர் தொம்ப வாய்க்காலை சென்றடைய வேண்டியுள்ளது. பள்ளி முன்புற சாலை மழை நீரால் சூழப்படுவதால், மழைக்காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.   
இதேபோல் சிக்கல் பகுதியில் அம்மா குளம், பாலா குளம், செக்கடி குளம், பிள்ளையார் குளம், மாரியம்மன் குளம், அய்யனார் கோயில் குளம், குறிச்சி குட்டை, மரைக்கான் குளம், தட்டான் குளம், வண்ணான் குளம், கள்ளி குளம் என 19 குளங்கள் உள்ளன. தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த குளங்கள், காலப்போக்கில் கால்நடைகளின் உபயோகத்துக்கானதாக மாறி, தற்போது கழிவுநீர் தேங்கும் இடங்களாக மாறிவிட்டன. மேலும் சில குளங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, தூர்ந்து போகும் நிலைக்கு உள்ளாகியுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்...
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு கூறியது: மாரியம்மன் கோயில் குளத்தின் படித்துறையை அப்பகுதி மக்கள் சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இது அடைக்கப்பட்டு விட்டதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் வண்ணான் குளம், தட்டான் குளம் ஆகியவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, குளத்தின் அளவு சுருங்கி விட்டது.  இதனால் மனிதர்கள், கால்நடைகள் பயன்படுத்துவதற்கு நீர்நிலைகள் இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனிடம் கேட்டபோது அவர் கூறியது:  நெடுஞ்சாலைத்துறையினருடன் கலந்தாலோசித்து, வடிகால் வசதியை மேம்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட குளங்கள் குறித்து அந்தத் துறையினருடன் பேசி  முடிவெடுக்கப்படும் என்றார்.
சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலை புனரமைக்க வந்த நகரத்தார், கோயிலைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களும் வளமாக வாழ வேண்டும் என்ற சமூகநல சிந்தனையுடன் உருவாக்கிய வடிகால் வசதிகள், வாழும் தலைமுறையின் சுயநலத்தால், மண்ணாசையால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை இனியும் அனுமதிப்பது,வாழும் தலைமுறையும், உள்ளாட்சி நிர்வாகமும் வருங்கால சமுதாயத்துக்கு இழைக்கும்  அநீதியே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதால் உடனடியாக வடிகால், வாய்க்கால், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com