40 பாலம் அமைக்க ஆண்டுகளாக கோரிக்கை

மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம் மற்றும் கொற்றவநல்லூர் கிராமங்களில் பாலம் அமைக்கக் கோரி கடந்த 40 ஆண்டுகளாக
Updated on
2 min read

மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம் மற்றும் கொற்றவநல்லூர் கிராமங்களில் பாலம் அமைக்கக் கோரி கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை ஆற்றில் இறங்கி எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நாகை   மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குள்பட்ட  குமாரமங்கலம், வடக்குவெளி,   திட்டாம்மேடு, சீபுலியூர் ஆகிய கிராமங்களில் சுமார் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக் கிராமங்களில் இறந்தவர்களின்  உடலை கொள்ளிடக்கரையில் உள்ள  கொண்டப்பன் காவேரி என்ற இடத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.
இவ்வாறு அடக்கம் செய்ய, கொள்ளிடம் ஆற்றின் துணை ஆறான தெற்கு ராஜன் வாய்க்காலை கடந்துதான்செல்ல வேண்டும். இந்த வாய்க்கலை கடக்க  மரப் பாலம் அமைத்துள்ளனர். இந்த பாலத்தில், ஒருவர்பின் ஒருவராகத்தான் செல்ல முடியும். இதனால், இறந்தவர்களின் உடலை தெற்குராஜன் வாய்க்காலில் இறங்கிதான் கொண்டு செல்லமுடியும். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மழைக் காலத்தில் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இறந்தவரின் உடலை பாடையில் வைத்து கட்டி  நீரில் இழுத்து செல்லும் அவல நிலை ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதனால், தெற்கு ராஜன் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என சுமார் 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், தெற்கு ராஜன் வாய்க்காலின் குறுக்கே 28 மீட்டர் நீளம், 6 மீட்டர்  அகலத்தில் இணைப்புப் பாலம் கட்டுவதற்காக ரூ.30 லட்சத்தில்  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரமங்கலம் கிராமத்தில் உடல்  நலக்குறைவால் உயிரிழந்த ராஜப்பன்(74)  உடலை அடக்கம் செய்ய தெற்கு ராஜன் வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி கொண்டு சென்றனர்.
இதேபோல், மயிலாடுதுறை வட்டம்,  கொற்றவநல்லூர் கிராமத்தில் சுடுகாட்டுக்குச்  செல்லும் பாதையில் இணைப்புப் பாலம் இல்லாததால்  அங்குள்ள ஐயவையனாற்றில் இறங்கி இறந்தவர்களின்  சடலத்தை தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், மக்கள் நலத்திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு  செய்யும்  அரசு நிர்வாகங்கள், குமாரமங்கலம் மற்றும்  கொற்றவநல்லூர் கிராம மக்களின் 40  ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைக்கு செவிமடுத்து,  தெற்கு  ராஜன் வாய்க்கால் மற்றும்   ஐயவையனாற்றின் குறுக்கே பாலம் கட்ட  வேண்டும். இதற்கான நடவடிக்கையை  நாகை மாவட்ட  நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து,  மயிலாடுதுறை  வட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி.வி.செந்தில்குமார் கூறியது: தெற்கு ராஜன் வாய்க்காலில் இணைப்புப் பாலம்  கட்டவேண்டும்  என்பது திருச்சிற்றம்பலம்  ஊராட்சிக்குள்பட்ட குமாரமங்கலம், சீபுலியூர், வடக்குவெளி, தியாகராஜபுரம்  கிராம மக்களின் 40  ஆண்டுகால   கோரிக்கையாகும். இந்த பாலம் கட்டப்பட்டால், விவசாயிகளும், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பயன்பெறுவார்கள் என்பதால் பாலம் கட்டும் பணி தொடங்குவதற்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும்   துணி நூல்துறை  அமைச்சர், நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும்  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நடவடிக்கை  எடுக்கவேண்டும்  என்றார்.
இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் கூறியது:
 தெற்கு ராஜன் வாய்க்காலில்  உயர்மட்டப் பாலம் கட்டுவதற்காக ரூ 1.50 கோடியில்  திட்ட மதிப்பீடு  தயார் செய்யப்பட்டு, அறிக்கை தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதி  தெரிவித்துள்ள நிலையில் நிதி கிடைத்தவுடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.
இதேபோல், கொற்றவநல்லூரில் பாலம் கட்டுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10  லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். பருவமழை  நிறைவுக்குப் பின்னர் பாலம்  கட்டும் பணி தொடங்கப்படும்   என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com