போதிய இட வசதியின்றி செயல்படும் சீர்காழி நகராட்சி பள்ளிக்கு சொந்த இடம் எப்போது கிடைக்கும், என்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.
சீர்காழி மடவிளாகத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி 1946 மே 28-ல் நர்சரி பள்ளியாக தொடங்கி, 2003 அக்டோபர் 1-ல் நடுநிலைப்பள்ளியாக, 2008 ஜூன் 10-ல் உயர்நிலைப்பள்ளியாக உயர்ந்து, 2010-ஆம் ஆண்டிலிருந்து முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சீர்காழி பகுதி ஏழை, எளிய மாணவர்கள் அதிகம் பேர் சேர்ந்து படித்து பயன்பெற்று வருகின்றனர். பள்ளி தொடங்கியதிலிருந்து படிப்படியாக வளர்ச்சிப் பெற்று மாணவர்களின் கல்வித்தரம் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிக்கு ஈடு கொடுக்கும் வகையில் நகராட்சி பள்ளியில் ஆசிரியர் -ஆசிரியைகள் கல்வி போதித்ததன் பலனாக சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நகராட்சி பள்ளி மாணவிகள் சீர்காழி வட்ட அளவில் சிறப்பான தேர்ச்சி பெற்று வருகின்றனர். கட்டணமின்றி சிறப்பான கல்வி கற்பிக்கப்படுவதாலும், சீர்காழியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததாலும் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது.
இப்பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு அரசியல் பிரமுகர்கள் சிபாரிசு செய்யும் அளவுக்கு பள்ளி வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் பள்ளியில் போதிய இடவசதி இல்லை. நடுநிலைப்பள்ளிக்குரிய இடவசதியுடன் தற்போது வரை மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. பிளஸ்-1 வகுப்பறை கட்டடங்களை மட்டும் வைத்துக்கொண்டு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளை வைத்து பாடங்கள் எடுக்க முடியாமல் ஆசிரியர்-ஆசிரியைகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீர்காழி கீழத்தென்பாதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வகுப்பறைகள் அமைத்து பாடம் நடத்தப்படுகின்றன. 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். போதிய இட வசதியில்லாததால் மாணவ-மாணவிகளை வராண்டாவிலும், மாடிப்படி அருகிலும், மரத்தடியிலும் அமரச்செய்து கல்வி கற்பிக்கப்படுகிறது. நெருக்கமான, காற்றோட்ட வசதி இல்லாத கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லாததால், பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கும் அவல நிலை உள்ளது. மாணவியர்களின் கழிப்பறை சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை.
சத்துணவு கூடம் போதிய இடவசதியின்றி புகை மூட்டத்தில் உணவு சமைக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள்,இடவசதியில்லாமை ஆகியவற்றுடன் செயல்படும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த இடம் தேர்வு செய்து கட்டடம் கட்ட பொதுமக்கள், பெற்றோர்கள் தரப்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளிக்கு சொந்த இடம் தேர்வு செய்து கட்டடம் கட்ட நகராட்சி முன்வந்தும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி மாற்று இடம் தேர்வு செய்யும் வகையில் செம்மங்குடி கிராமம் செல்லும் வழியில் தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி பொது நிதியிலிருந்து நிதி வழங்கி கிரயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணப் பிரச்னையால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, சீர்காழி பகுதி சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து அத்தொகையை வசூல் செய்து தருவதாக கூறியும் அதற்கு நகராட்சி அதிகாரிகள் முனைப்பு காட்டாததால் அத்திட்டமும் செயல்வடிவம் பெறவில்லை.
இதுகுறித்து மீண்டும் வலியுறுத்திய பிறகு அப்போதைய அதிமுக எம்எல்ஏ ம. சக்திக்கும், அப்போதைய திமுக நகர்மன்ற தலைவர் ஜெ. இறை எழிலுக்கும் (தற்போது அதிமுக) இடையே இருந்த கட்சி பாகுபாட்டினால் நகராட்சி பள்ளிக்கு இடம் தேர்வு செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையில், சீர்காழி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த இடம் தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி புளிச்சக்காடு கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடம் ஆய்வு செய்த போது, அந்த இடம் நகராட்சி துப்புறவுப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, சீர்காழி பழைய அரசு மருத்துவமனை வளாக கட்டடத்தில் நகராட்சி பள்ளி கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு மருத்துவத்துறை இயக்குநர் அலுவலகம் அனுமதி வழங்காததால் அத்திட்டமும் கைவிடப்பட்டது. இவ்வாறு பல ஆண்டுகளாக நகராட்சி பள்ளிக்கு இடம் தேர்வு செய்யப்படுவதும் அதில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு இழுப்பறி நீடிப்பதுமாக உள்ளதால் மாணவ-மாணவியர்கள், சமூக ஆர்வலர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் சமூக ஆர்வலர்கள் சீர்காழி நகராட்சி பள்ளிக்கு சொந்தமாக இடம் தேர்வு செய்ய நிதி வசூலித்து தர தயாராக உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம், பள்ளி, கல்வித்துறை ஆகிய அனைத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து தீர்வு கண்டால் மட்டும் சீர்காழி நகராட்சி பள்ளிக்கு சொந்த கட்டடம் அமைவது சாத்தியமாகும். இல்லையெனில் ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி கனவாகவே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.