உயர்நீதிமன்றம் உத்தரவு: திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலின் பிரமோத்ஸவ விழா தொடக்கமாக  பூர்வாங்க பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலின் பிரமோத்ஸவ விழா தொடக்கமாக  பூர்வாங்க பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரத்தில் உள்ளது அருள்மிகு செளரிராஜப் பெருமாள் கோயில்.  4 ஆழ்வார்களால் 128 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட இத்தலம், பெருமாளின் கீழை வீடாகப் போற்றப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு 2005-ஆம் ஆண்டு செப். 14-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த மே மாதத்தில் குடமுழுக்கு திருப்பணிகளைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி பாலாலயம் (திருப்பணி  தொடக்கம்)  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக, இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் பிரமோத்ஸவ விழா நிகழாண்டில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  ஆகம விதிகள்படி நடைபெற வேண்டிய பிரமோத்ஸவ விழாவை ரத்து செய்யக் கூடாது,  உரிய காலத்தில் இவ்விழா நடத்தப்படாததால் பிராயச்சித்த பூஜைகள் நடத்தி, பிரமோத்ஸவ விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம். சுந்தர் ஆகியோரடங்கிய  அமர்வு,   ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவத்தை நடத்த வேண்டும் எனவும், முன்னதாக பிரயாச்சித்த பூஜைகள் நடத்த வேண்டும் எனவும் புதன்கிழமை (ஜூன் 28) உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விழா சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகளை மாவட்டக் காவல் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலின் பிரமோத்ஸ விழா தொடக்க  பூர்வாங்க பூஜைகள் வியாழக்கிழமை (ஜூன் 29) நடைபெற்றன.  அனுக்ஞை, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சார்யர் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தினர்.  கோயில் தக்கார் ராணி, செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார் ஆகியோர் மேற்பார்வையில், கோயில் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கோயிலின்  பிரமோத்ஸ விழா திருக்கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) காலை 9. 15 மணி முதல் 10. 15 மணிக்குள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com