பயிர்க் காப்பீடு: விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

2016- 17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் நிலவும் குளறுபடிகளைத் தீர்த்துவைத்து, விவசாயிகள் மேற்கொண்டு
Updated on
2 min read

2016- 17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் நிலவும் குளறுபடிகளைத் தீர்த்துவைத்து, விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 2016-17 ஆம்  ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் பல்வேறு இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்தந்த பருவத்துக்கான இழப்பீட்டை 60  நாள்களில் வழங்க வேண்டும் என விதி இருந்தும், அடுத்த சாகுபடி பருவம் (2017-18) நிறைவடையும் நிலையிலும் கடந்தாண்டு  பயிர்க் காப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை. 
செயற்கைக்கோள் மூலம் பெறும் விவரப்படி இழப்பீடு தரப்படுவதாக தெரிவிக்கும் காப்பீடு நிறுவனங்கள் தயாரித்த பட்டியலில் தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொள்ளும் அரசுத் துறையினர், அதை சரி செய்வதில் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வேதாரண்யம் பகுதியில் பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி தொடர் காத்திருப்புப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கத்தரிப்புலம் கிராமத்தில் டிச.18-ஆம் தேதி தொடங்கிய காத்திருப்புப் போராட்டம்  38 நாள்களை கடந்துள்ளது.  இதேபோன்று, ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் தொடர்கிறது.
இதுகுறித்து வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் என்.வி.காமராஜ் கூறியது:
அரசு விவசாயிகளிடையே பேச தயங்குவதைப் பார்த்தால், இழப்பீட்டுத் தொகை எங்கேயோ கைமாறியுள்ளதாக விவசாயிகள் கூறும் புகாரில் உண்மை இருக்குமோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. அரசு பேசவில்லை என்றாலும் தொகுதியின் அமைச்சர் ஓ.எஸ். மணியன், அந்த பேரவை தொகுதியின் உறுப்பினர் என்ற முறையிலாவது விவசாயிகளிடையே பேச தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
சமூக ஆர்வலர் சோமு.இளங்கோ:  தவறு நடந்துள்ளதை அரசு தரப்பில் ஒப்புக்கொண்டு திருத்தப்பட்ட பட்டியலை உரிய காப்பீடு நிறுவனத்துக்கு அளித்துள்ளனர். ஆனால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  செயற்கைக்கோள் விவரப்படி அமைச்சரின் ஊரில் மட்டும் நூறு சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது என்றால், பக்கத்து ஊரில் எப்படி பாதிப்பு குறையும்? என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் கேட்டபோது, அவர் கூறியது:
காப்பீடு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாநில அரசு கொடுத்துவிட்டது. இழப்பீடு வழங்கவேண்டிய முழுப்பொறுப்பும் காப்பீடு நிறுவனத்துக்குரியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டங்களில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டும், போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களது ஜனநாயக உரிமை என்றார்.   
பேச்சுவார்த்தை?: விவசாயிகள் போராட்டம் 38 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை குடியரசு தினம் என்பதால் அன்றைய நாளில் போராட்டத்தைத் தவிர்க்க அரசு பேச்சு வார்த்தை நடத்தலாம் அல்லது கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
எனவே, காப்பீடு நிறுவனத்திடமிருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் இழப்பீட்டை பெற்றுத்தர  மாவட்ட  நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளாமல், மௌனம் தொடர்ந்தால் விவசாயிகளின் சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்து விடும் என்கின்றனர் நடுநிலையாளர்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com